//டிராஃபிக் ராமசாமி பாடல் மற்றும் டீஸர் வெளியீடு

டிராஃபிக் ராமசாமி பாடல் மற்றும் டீஸர் வெளியீடு

சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி அவர்கள் படத்தை இயக்கியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள MIT பொறியியல் கல்லூரியில் தான் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங் படித்தார். அந்த கல்லூரியில் கடந்த சனிக்கிழமை சுமார் மூவாயிரம் பொறியியல் மாணவர்கள் மத்தியில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டைட்டில் டிசைன் அறிமுக விழா நடந்தது. அதில் மாணவர்கள் ஹரிஷ், மற்றும் ரேஷ்மா டைட்டிலை வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அப்துல் கலாம் படித்த எங்கள் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி பட டைட்டிலை வெளியிட்டதை மிகுந்த பெருமையாக கருதுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

T.R Title Design Release

இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழாவில் படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது

IMG_3816

” இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார் .

ஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி நான் என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டேன். ஆனால் விக்கி போகாமல் எனக்கு உங்கள் கூட இருந்தால் போதும் சம்பளமே வேண்டாம் என்று கூடவே இருந்தார். ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் “ஒன் மேன் ஆர்மி “என்கிற வாழ்க்கைக் கதை .
படித்தேன். அதைப் படமாக எடுக்கலாம் என்று விக்கி கூறிய போது என்னால் மறுக்க முடியவில்லை.

கதையைப் படித்து முடித்த போது அவரும் என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது. தவறு நடந்தால் கோபப்படுவேன் என்ற அவரது குணம் எனக்குப் பிடித்தது. அவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கையில்தான் எவ்வளவு போராட்ட அனுபவங்கள் என வியந்து போனேன் .

நான் 45 ஆண்டுகளில் 69 படங்கள் இயக்கி விட்டேன். நான் விட்டுச் செல்லும் பெருமையான அடையாளமாக என்ன செய்திருக்கிறோம்? என யோசித்த போது இப்படத்தை அப்படி ஒரு அடையாளமாக எடுக்க நினைத்தேன் . நாங்களே எதிர்பாராத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில் இணைந்தார்கள், எனக்கு ஜோடியாக ரோகிணி இணைந்தார் . கதாநாயகன் போன்ற பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் வந்தார். ஒரே காட்சி என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது. இப்படியே குஷ்பூ, சீமான் எல்லாம் படத்துக்குள் வந்தார்கள் .சில காட்சிகளுக்கு ஒப்புக் கொண்டார் பிரகாஷ்ராஜ் . இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர்.

இப்படம் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டதாகும் . சர்ச்சைகள் கொண்ட கதைதான் இது என்பது மறுப்பதற்கில்லை. இது பற்றி எந்த மிரட்டல் வந்தாலும் பயமில்லை. ஏனென்றால் என் முதல் பட ம் ‘சட்டம் ஒரு இருட்டறை ‘படத்திலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான்.” இவ்வாறு எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசினார்.

இப்படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் வெளியிட்டிருக்கிறார். படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் அவர்கள் கூறும் போது ,

close up
“டிராஃபிக் ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர் . தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில் இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும் தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் உருவாகியுள்ளது.

துணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள்.” என்று பாராட்டி வாழ்த்தினார்.

‘டிராஃபிக் ராமசாமி’ இசை வெளியீட்டு உரிமையை டிரெண்ட் மியூசிக் கைப்பற்றியது!

சமூகத்திற்காக தனி மனிதனாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் சமூகப் போராளியான டிராபிக் ராமசாமியின் வாழ்வை மையமாக வைத்து இப்படம் உருவாகுவதால் இப்படத்தின் இசையை வெளியிடுவதை எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த கொளரவமாக கருதுவதாகவும், ’ஹரஹரமகா தேவ்கி’ இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைத்திருப்பதால் பாடல்கள் ட்ரெண்டிங்காக இருக்கும் என்று டிரெண்ட் மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.