தீபாவளி – பட்டாசு

தீபாவளி திருநாளின் முக்கிய அம்சமே பட்டாசுகள் தான். அத்தகைய பட்டாசுகளை காற்று மாசுபடும் காரணத்தால், இந்தியா முழுவதும் விற்பனைக்கு முழு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பினை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகவும் வரவேற்றுள்ளனர். பட்டாசு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரம் எப்படி அடிப்படை உரிமையோ, அதைவிட 130 கோடி மக்களின் உடல் நலம் மிகமுக்கியம் என்பதால் இப்படி ஒரு தீர்ப்பு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1922 ஆம் ஆண்டு இந்தியாவின் கொல்கொத்தாவில் ஜப்பானை சார்ந்த சிலர் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தின் சிவகாசியிலிருந்து ஐயன் மற்றும் சண்முகம் அகியோர் கொல்கொத்தா சென்று தீப்பெட்டி தொழிலை கற்று தேர்ந்தனர். 1928ஆம் ஆண்டு அவர்கள் சிவகாசிக்குத் திரும்பி, முதல் தீப்பெட்டி தொழிற்சாலையை உருவாக்கினர். தீப்பெட்டி தொழில் பட்டாசாக உருமாறி இன்று இந்தியாவில் 90% மேல் பட்டாசு தயாரிப்பு சிவகாசியில் தான் நடைபெறுகிறது.

இத்தகைய பட்டாசுகளை தீபாவளிக்கு மிகக் குறைந்த நாள்களே உள்ள நிலையில் முழுவதுமாக தடைசெய்வது சாத்தியமற்றது. தீபாவளி பண்டிகையன்று இரவு 8 முதல் 10 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பட்டாசுகளை வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அளித்த 2 மணி நேரம் போதாது என்பதால் கூடுதலாக 2 மணி நேரம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. “தீபாவளி அன்று 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்க இயலாது. அந்த 2 மணி நேரத்தை தமிழக அரசே தீர்மானித்துக் கொள்ளலாம்”, என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் தமிழக அரசு அனுமதி வழங்குகிறது. பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் பொதுமக்கள் முயற்சிக்கலாம் என்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ரூபாய் 20,000 கோடி அளவில் விற்பனை செய்யப்படும் பட்டாசுகள் இந்த இரண்டு மணி நேரக்கெடுவுக்குள் வெடித்து தீர்க்கப்படுமா?

மேலும் தீபாவளியன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆட்சியர் தொடங்கி வி.ஏ.ஓ வரை கண்காணிக்க வேண்டும்; விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். ஆனால் தடையை மீறினால் என்ன நடவடிக்கை என்று தெளிவுபடுத்தபடவில்லை. அதேபோல் இந்த நேரக்கட்டுப்பாடு தீபாவளி அன்று மட்டும்தான். முன்பும் பின்பும் என்ன என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அரசு அறிவித்த நேரத்தில் பட்டாசு வெடிப்பது, விற்பனையைக் கண்காணிப்பது குறித்து தமிழகத்தில் 500 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தனிப்படை 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். தமிழக அரசு அறிவித்த நேரத்தைத் தவிர்த்து பட்டாசு வெடித்தால் பொதுமக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

காற்று மாசுபடுதல் மனித உயிர்கள் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளுக்குமே தீமை விளைவிக்கக்கூடியது தான். சில நூற்றாண்டுகள் பழமை உள்ள பட்டாசு கலாச்சாரத்தினை நாமாகவே முன்வந்து நிறுத்தினால் மட்டுமே, நமது எதிர்காலச் சந்ததியினருக்கு அவர்கள் வாழக்கூடிய சுற்றுச்சூழலை நம்மால் விட்டுச் செல்ல முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *