//பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்!

பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்!

பிரபல நடிகை ஸ்ரீதேவி(55) துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பு காரணமாக காலமானார்.

நடிகை ஸ்ரீதேவியின் இயற்பெயர் ஸ்ரீ அமா யங்கேர் அய்யப்பன். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் ஆகஸ்ட் 13, 1963-ல் பிறந்தார். ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பன் தமிழகத்தைச் சேர்ந்தவர். தாய் ராஜேஸ்வரி ஆந்திராவைச் சார்ந்தவர்.

ஸ்ரீதேவி தனது திரையுலக வாழ்வை குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிட்டார். எம்.ஏ.திருமுகம் இயக்கிய பக்திப்படமான ‘துணைவன்’ திரைப்படத்தில் தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக, சிறு வயது முருகன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ஸ்ரீதேவி. ‘ஜூலி’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ரீதேவி.

‘நம் நாடு’, மற்றும் ‘என் அண்ணன்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்தார். ‘வசந்த மாளிகை’ மற்றும் ‘பாரத விலாஸ்’ திரைப்படங்களில் சிவாஜியுடனும் நடித்தார்.

தொடர்ந்து பல்வேறு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவியை பதிமூன்று வயதிலேயே ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலம் கதாநாயகியாக்கினார், ,மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர்.

தொடர்ந்து ’16 வயதினிலே’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ ,’ஜானி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘மீண்டும் கோகிலா’, ‘மூன்றாம் பிறை’ எனப் பல திரைப்படங்களின் மூலம் அன்றைய தமிழ் ரசிகர்களின் ஆதர்ச இடத்தைப் பிடித்து பிரபலமானார், ஸ்ரீதேவி.

1983- ல் ‘ஹிம்மத் வாலா’ ஹிந்தி திரை பிரவேசம் அவரை இந்திய திரைப்பட ரசிகர்களின் மனதில் ‘கனவுக்கன்னி’யாக குடியேற்றி உலகப்புகழ் தேடி தந்து . 1997 -ல் தற்காலிகமாக நடிப்பை நிறுத்தியவர் 2012-ல் ‘இங்கிலீஷ் விங்க்ளீஷ்’ படத்தில் நடித்து மீண்டும் நடிப்பை தொடர்ந்து தனது ஆளுமை செலுத்தினார்.

2013-ல் இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ ‘ பட்டம் அளித்து கௌரவித்தது. தனி மனித வாழ்கையில் சோதனைகள் தாய் தந்தையரின் இழப்பு என்ற இன்னல்களையும் வேதனைகளயும் தாண்டி மன உறுதியாலும் உழைப்பாலும் உட்சநட்சத்திர நாயகியாக திகழ்ந்து தனக்கு பின்னால் வந்த நடிகைகளுக்கு மார்கதர்சியனவர் ஸ்ரீதேவி .

6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார். இந்நிலையில் அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

திரையுலகினர் அதிர்ச்சி:

நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்தாக ஊடகங்களுக்கு அதிகார்பூர்வமாக இன்று அதிகாலை 3 மணி அளவில்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால், நடிகை ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இரவு 1 மணி அளவில் ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “ என் மனது ஏதோ குழப்பத்தில் இருக்கிறது. எதுவுமே சரியாகப் படவில்லை. வழக்கத்துக்கு மாறாக என் மனது ஏதோ ஒரு செய்தியைச் சொல்கிறது. எனக்கு ஏன் இப்படி அலைபாயும் சூழல் இருக்கிறது எனத் தெரியவில்லை” என்று தெரிவித்து இருந்தார்.

இந்த ட்விட்டுக்கு அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். ஆனால், இந்த ட்விட்டுக்கு அடுத்தார்போல், வேறு எந்த ட்விட்டையும் அமிதாப் செய்யவில்லை. அடுத்த சில மணிநேரங்களில் ஸ்ரீதேவியின் மரணச்செய்தி அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.