//சுத்தமடையும் தமிழ்திரையுலகம்

சுத்தமடையும் தமிழ்திரையுலகம்

கடந்த சில நாட்களாக கேளிக்கை வரி குறைப்பு, திரையரங்கு டிக்கெட் கட்டணம் தொடர்பாக போராட்டம் மற்றும் தமிழக அரசுடன் தமிழ்த் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக எந்த புதிய திரைப்படமும் வெளிவரவில்லை.

இந்நிலையில் மீண்டும் இன்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமிழ்த் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஒரு சுமுகமான முடிவு எட்டப்பட்டது.

அப்பேச்சுவார்த்தையின் முடிவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் விஷால் பேசியதாவது:

முன்பு அறிவித்த 10% கேளிக்கை வரியிலிருந்து 2% குறைத்து, தமிழ் சினிமாவுக்கு 8% கேளிக்கை வரி என்று தெரிவித்துள்ளார்கள். மற்ற மொழி படங்களுக்கு 20% கேளிக்கை வரி என்று அறிவித்துள்ளார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு திரையரங்கிற்கும் சி-பார்ம் என்ற விதிமுறை உண்டு. அதில் குறிப்பிட்டுள்ளதைத் தாண்டி யாருமே அதிகமாக வசூலிக்கக் கூடாது. கேண்டீன்களில் விற்கப்படும் உணவுகளில் MRP-ல் குறிப்பிட்டுள்ள பணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதை முறையாக இனிமேல் பின்பற்றப்பட வேண்டும். ஆன்லைன் கட்டணம் தொடர்பாகவும் இன்று தான் நடவடிக்கையில் இறங்குகிறோம். 30 ரூபாய் என்றில்லாமல் அதற்கான முறையான கட்டணத்தை வசூலிப்பது தொடர்பாக விரைவில் வழிமுறைகள் மேற்கொள்ளப்படும்.

தயவு செய்து அதிக கட்டணங்கள் கொடுக்காதீர்கள். நடிகர்களும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் என்கிறார்கள். அனைத்தையுமே முறைப்படுத்துவதற்கான முயற்சிதான் இது. தமிழ் திரையுலகம் இனிமேல் சுத்தமாக செயல்படும்.

புதிய டிக்கெட் விலை விவரம்

அபிராமி ராமநாதன் பேசியதாவது:

படத்தின் தன்மைக்கு ஏற்றவாறு விண்ணப்பித்து டிக்கெட் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆகையால் சிறுபடங்கள் வரும் போது விண்ணப்பித்து டிக்கெட் விலையைக் குறைத்து கொள்வோம்.

அரசாங்கத்திடம் நாங்கள் கேட்ட டிக்கெட் விலையைக் கொடுத்துவிட்டார்கள். ஆகையால், பெரிய படங்களூக்கு இனிமேல் அதிகமான விலையில் டிக்கெட் விற்பனை இருக்காது. டிக்கெட் விலையை அதிகமாக விற்கும் திரையரங்குகளுக்கு உறுதுணையாக இருக்க மாட்டோம். தமிழக அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

திரையுலகம் சார்ந்த அனைத்து கோரிக்கைகளையும் கேட்டு, அரசாங்கம் விதித்திருக்கும் விஷயம் இதுதான். மற்ற மொழிப் படங்களுக்கான கேளிக்கை வரியை மறு பரிசீலனை செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.